கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள ஆண்டிப்பட்டிக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இன்று அதிகாலை 3.30 மணிக்கு மரத்தில் மோதியதில் படுகாயமடைந்த தந்தை, மகள் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த தாயும், மகனும் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய காரை ஓட்டி வந்தவரின் சடலத்தை அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் கிரேன் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சூளை ஜிகேஆர் நகரை சேர்ந்தவர் நடராஜ். இவர் மகன் கிருஷ்ணகுமார் (40). இவர் ஈரோட்டில் இருந்து திருச்செந்தூருக்கு குடும்பத்துடன் நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரிலிருந்து ஈரோட்டுக்கு நேற்றிரவு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள ஆண்டிப்பட்டிக்கோட்டை அருகே இன்று அதிகாலை 3.30 மணிக்கு கார் வந்தப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரை ஓட்டிவந்த கிருஷ்ணகுமார், அவர் மகள் வருணா (10), மாமியார் இந்திராணி (67) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கிருஷ்ணகுமார் மகன் சுதர்சன் (15), மனைவி மோகனா (40) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை ஓட்டி வந்த கிருஷ்ணகுமார் சடலம் காரில் சிக்கிக் கொண்டதால் அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தினர் சுமார் 1 மணி நேரம் போராடி கிரேன் உதவியுடன் சடலத்தை மீட்டனர். அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.