ராயப்பேட்டை – ஆர்.கே.சாலை மெட்ரோ சுரங்கப்பாதை பணி : அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் பால்பண்ணை – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக ராயப்பேட்டையில் இருந்து ஆர்.கே.சாலை நோக்கி சுரங்கப்பாதை பணி இன்று தொடங்கியது. இதற்காக, “பவானி” என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தின் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை (45.4கி.மீ) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாதவரம் பால்பண்ணை – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், ஒரு பகுதியாக ராயப்பேட்டையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலை (ஆர்.கே சாலை) நோக்கி 910 மீட்டர் வரையிலான சுரங்கப்பாதை அமைக்கும் பணி இன்று தொடங்கியது.

இந்த பணியை மேற்கொள்ள “பவானி” என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தின் சுரங்கம் தோண்டும் பணியை, சென்னை ராயப்பேட்டையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு முயற்சிகள் துறை முதன்மை செயலர் ஹார் சகாய், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஆலப்பாக்கத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலப்பாதை பணிகளை அமைச்சர் உதயநிதி பார்வையிடுகிறார். 4-வது மற்றும் 5-வது வழித்தடங்கள் 3.7 கி.மீ. தொலைவுக்கு இணையும் வகையில், இரட்டை அடுக்கு மேம்பாலப்பாதை அமைக்கப்படுகிறது. இங்கு இரட்டை அடுக்கு மேம்பாலப்பாதை அமைக்கும் பணியை பார்வையிட்டார். தொடர்ந்து, பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ ரயில் பணியை அமைச்சர் ஆய்வு செய்கிறார்.