நீட் முறைகேடு, காவிரி நீர் பங்கீடு, வெள்ள நிவாரண நிதி, சென்னை மெட்ரோ நிதி உள்ளிட்டவை பற்றி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது விவாதிக்க திமுக கோரிக்கை

நீட் முறைகேடு, காவிரி நீர் பங்கீடு, வெள்ள நிவாரண நிதி, சென்னை மெட்ரோ நிதி உள்ளிட்டவை பற்றி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தியுள்ளது. மாநிலத்துக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதி உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்க திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் இன்று நாடாளுமன்ற அனைத்துகட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. நாடளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

திமுக-வை பொறுத்தவரையில் திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, திமுக மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா தேசிய வாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், வைகோ, தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கழந்துகொண்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை(21-07-2024) தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை பொறுத்த வரையில், மத்திய அரசு பல்வேறு மசோதாக்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. திமுகவை பொறுத்தவரையில் நீட் முறைகேடு, காவிரி நீர் பங்கீடு, வெள்ள நிவாரண நிதி, சென்னை மெட்ரோ நிதி உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.