தங்க கடத்தல் செய்பவருக்கு நெருக்கமானவர் அண்ணாமலை – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உச்சநீதிமன்ற ஆணையின்படி நாடு முழுவதும் நடந்த நீட் முடிவுகள் நேற்று வெளியானது.

இதில் பல்வேறு குளறுபடிகள் அம்பலமாகி உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் எழுதியவர்களின் புள்ளி விபரங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த தேர்வில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதி அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி நீட் முடிவு வெளியான அறிவிப்பில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியான மதிப்பெண் பட்டியலில் 744 பேர் கூடுதலாக எழுதி இருப்பதாக இருந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகளால் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது. அதேபோல மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் யு.பி.எஸ்.சி.யிலும் ஊழல்கள் வெளியாகி அதன் தலைவர் ராஜினாமா செய்திருக்கிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற குடிமைப் பணி இடங்களை நிரப்புவதற்கான மத்திய பணியாளர் தேர்வாணையத்திலும் பல மோசடிகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி ஆட்சியில் நீட் தேர்வினால் மருத்துவத்துறை சீரழிந்து வருகிறது. யு.பி.எஸ்.சி. தேர்வினால் குடிமைப்பணி தேர்வுகளும் ஊழலுக்கு இரையாகி உள்ளன.

சென்னையில் 267 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட 6 பேருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். பாஜக நிர்வாகியான பிரித்வி என்பவர் அண்ணாமலைக்கு மிக மிக நெருக்கமானவர். இவர் இந்த தங்க கடத்தலில் பின்னணியாக இருந்து செயல்பட்டிருக்கிறார் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.