“உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதை வழிமொழிகிறேன்,” என்று திருப்பூரில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.
திருப்பூரில் பொதுமக்களின் வசதிக்காக திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு திருப்பூர் மண்டலம் சார்பில் 19 புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தனர். பின்னர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “திமுக இளைஞரணி 45-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த நிலையில், இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதனை வழிமொழிகிறேன். உதயநிதி ஸ்டாலினிடம் துணை முதல்வராக திறம்பட செயலாற்றக்கூடிய திறமை உள்ளது. அவர் துணை முதல்வராகும் பட்சத்தில் தமிழகத்தில் இன்னும் சிறப்பான ஆட்சியை கொண்டுவர முடியும். இதனால் அவர் துணை முதல்வராவதை வழிமொழிகிறோம். அதிமுக ஆட்சி காலத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது போல் அல்லாமல் ஆங்காங்கே சிறு, சிறு குற்ற சம்பவங்கள் நடந்தாலும் தமிழக அரசு நடுநிலையோடு செயல்பட்டு வருகிறது,” என்று கூறினார்.