“அம்மா உணவகங்கள் விவகாரத்தில் திமுக அரசிடம் உள்நோக்கம்” – தினகரன் சாடல்

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவை வழங்கிய அட்சயப்பாத்திரமான அம்மா உணவகங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவே அம்மா உணவகங்களுக்குள் திமுகவினர் புகுந்து பொருட்களை சூறையாடிய நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, ஊழியர்கள் பணிநீக்கம், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு என, அம்மா உணவகங்களை முற்றிலுமாக மூடுவதையே குறிக்கோளாய் கொண்டிருந்த திமுக அரசு, தற்போது திடீரென மேம்படுத்துவதாக அறிவிப்பது உள்நோக்கம் கொண்டதாக அமைந்திருக்கிறது.

ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னோடித் திட்டமாக திகழும் அம்மா உணவகங்கள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட சமையல் கூடங்களாக ஒப்பந்ததாரர்கள் மூலம் மாற்றப்பட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே நேரத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் காலை உணவுகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், அதனை குறைந்த அளவு மாணவர்கள் மட்டுமே உட்கொள்வதாகவும் புகார் எழுந்திருக்கும் நிலையில், அனைத்து மாணவர்களும் உணவு அருந்தியதாக போலிக் கணக்கு காட்டப்படுவது கடும் கண்டத்திற்குரியது.

எனவே, அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன்மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தரமான உணவுகளை வழங்குவதோடு, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகளை உடனடியாக களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.