“2026-ல் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும்” – கார்த்தி சிதம்பரம் விருப்பம்

“2026-ம் ஆண்டு அமையும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்” என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் விருப்பம் தெரிவித்தார்.

சிவகங்கையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியவது: “மக்களவைத் தேர்தலில் கூட்டணியால் வெற்றி பெற்றோம் என்பதற்காக நமக்கு பலம் இல்லை என்று நினைக்க வேண்டாம். காங்கிரஸ் சேரும் கூட்டணிக்கு தான் சிறுபான்மையினர், ஆதிதிராவிடர்கள் வாக்கு அளிக்கின்றனர். 40 தொகுதிகளிலும் வெல்வதற்கு நாமும் உறுதுணையாக இருந்துள்ளோம்.

தமிழகத்தில் 1967-க்கு முன் காங்கிரஸ் முதலிடத்தில் இருந்தது. தொடர்ந்து 2-வது இடம், அதிமுக உருவானதும் 3-வது இடத்துக்கு சென்றது. தற்போது புதிய கட்சிகள் கூட நமக்கு நெருக்கடி கொடுக்கின்றன. தனித்து நின்றால் 3-வது இடத்தில், 4-வது இடத்தில் இருக்கிறமோ என்று தெரியவில்லை. கட்டமைப்பு இல்லாமலேயே நாம் தமிழர் கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸுக்கு இளைஞர்கள் நாடி வருவதில்லை. அவர்கள் புதிய கட்சிகளுக்கு செல்கின்றனர். அதை தடுக்க வேண்டும். நாம் தேர்தல் நேரத்தில் சீட் பெற்று, வெற்றி பெறுவது பெரிதல்ல.தேர்தல் இல்லாத நேரத்திலும் மக்களுடன் உறவு வைத்திருந்தால் நமக்கு ஆதரவு அளிப்பர்.

மக்கள் பிரச்சினைகளுக்கு கூச்சம் இல்லாமல் குரல் கொடுக்க வேண்டும். கூட்டணியில் இருக்கிறோம் என்று மக்கள் பிரச்சினையை பேசாததால் மக்கள் நம்புவதில்லை. உள்ளூர் பிரச்சினையை பேசாமல் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது. பொது மேடையில் மாநிலத் தலைமை மக்கள் பிரச்சினை குறித்து பேச வேண்டும். ரூ.20,000 கோடிக்கு கள்ளச்சாராயம் விற்பனையாகிறது. அது அதிகார வர்க்கத்துக்கு தெரிந்து தான் நடக்கிறது. கூலிப்படை அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் இறந்தார். அது கொலையா, தற்கொலையா என்று கண்டறியாமல் காவல் துறை உள்ளது. அவற்றை பற்றி பேச வேண்டும்.

கூட்டணி தர்மம் என்று கூறி கூனி, குறுகி இருக்கக் கூடாது. தேர்தல் இல்லாத நேரத்திலும் நாம் ஆக்கபூர்வமான அரசியல் கட்சியாக செயல்பட வேண்டும். வருகிற 2029-ல் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். ஆனால் அதற்கு முன் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸுக்கு முக்கியமான தேர்தல். அப்போது அமையும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்” என்றார்.