மும்பையை அதானி நகரமாக மாற்ற விடமாட்டோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை தாராவி பகுதி தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்குள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை இடித்து விட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. இத்திட்டத்தை நிறைவேற்ற பல முறை டெண்டர் விடப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. கடைசியாக டெண்டர் விடப்பட்டதில் தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தும் ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் பெற்றுள்ளது.
தாராவியில் அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மும்பையை அதானி நகரமாக மாற்ற விடமாட்டோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அதில், தாராவி குடிசைப்பகுதி மறுசீரமைப்பு திட்ட டெண்டரை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார். மும்பையை அதானி நகரமாக மாற்ற அனுமதிக்கமாட்டோம்.
நாங்கள் கூடுதல் சலுகைகள் எதையும் வழங்கமாட்டோம். தாராவியில் வாழும் மக்களுக்கு எது நல்லதோ அதை செய்வோம். தேவைப்பட்டால் புதிய டெண்டரை வழங்குவோம்” என தெரிவித்துள்ளார். டெண்டரை ஏன் இப்போது ரத்து செய்யக்கூடாது என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். தாராவி குடியிருப்பாளர்கள், வணிகங்கள் அடியோடு அகற்றப்படாமல் இருப்பதை எனது கட்சி உறுதி செய்யும் என்றும் கூறினார். தாராவியில் தங்கியிருக்கும் மக்களுக்கு அந்த வட்டாரத்திலேயே 500 சதுர அடி வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.