நீட் யுஜி 2024 தேர்வுக்கான முடிவுகளை நகரம் மற்றும் தேர்வு மையம் வாரியாக வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

சர்ச்சைக்குள்ளான நீட் இளநிலை மருத்துவத் தேர்வுக்கான முடிவுகளை நகரம் மற்றும் தேர்வு மையம் வாரியாக தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டது.

முன்னதாக இந்த தேர்வு முடிவுகள் ஜூன் 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தேர்வு தாள் கசிவு, தேர்வுகளை நடத்துவதில் முறைகேடு உள்ளிட்ட புகார் மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி முன்பு வெளியான தேர்வு முடிவுக்கு பதிலாக இந்த முறையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக, வெளிநாட்டில் உள்ள 14 நகரங்கள் உட்பட நாடுமுழுவதும் உள்ள 571 நகரங்களில் உள்ள 4,750 மையங்களில் 24 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கடந்த மே 5ம் தேதி நீட் யுஜி தேர்வு எழுதினர்.

இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, 40க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும், தேர்வினை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நடைறெ இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.