சிவகாசி அருகே அனுப்பங்குளத்தில் சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் இன்று அழித்தனர்.
சிவகாசி அருகே அனுப்பங்குளம் கிராமத்தில் அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான ‘பெசோ’ உரிமம் பெற்ற வேம்பார் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் கடந்த மே மாதம் 28-ம் தேதி தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் தனி வட்டாட்சியர் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, பட்டாசு ஆலையில் உள்ள குடோனில் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட 1000, 2000, 5000 வாலா சரவெடிகள் உள்ளிட்ட பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்தக் குடோனுக்கு சீல் வைத்தனர். இந்தப் பட்டாசு ஆலையின் உரிமம் ஏற்கெனவே தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருந்ததால், உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இந்த நிலையில், குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி பட்டாசு ஆலை உரிமையாளர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, குடோனில் உள்ள தடை செய்யப்பட்ட சரவெடி ரக பட்டாசுகளை அழித்துவிட்டு, குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று தனி வட்டாட்சியர் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் குடோனில் 32 பெட்டிகளில் இருந்த 1000, 2000, 5000 வாலா சரவெடி ரக பட்டாசுகளை எடுத்து, குழியில் போட்டு, தண்ணீர் ஊற்றி, மண் நிரப்பி குழியை மூடினர். அதன்பின் குடோன் சாவியை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.அழிக்கப்பட்ட சரவெடி ரக பட்டாசுகளின் மதிப்பு ரூ.4 லட்சம் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.