ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னையில் கண்டனப் பேரணி – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்தும், நீதி கேட்டும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், தினேஷ் உள்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52), சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் உள்ள தனது வீட்டின்முன்பு கடந்த 5-ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியை சேர்ந்த பொன்னை பாலு (39), குன்றத்தூர் திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர்.

கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிய திருவேங்கடம் கடந்த 14-ம் தேதி போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சூழலில், மற்ற 10 பேரிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் அளித்த தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் சிக்கியவர்களில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதால், அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீதி கேட்டு இயக்குநர் பா.ரஞ்சின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் இன்று பேரணி நடைபெற்றது. எழும்பூர் ரமடா ஹோட்டல் எதிரில் இருந்து துவங்கிய இந்தப் பேரணி ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடையவுள்ளது. இந்தப் பேரணியில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், தினேஷ் உள்ளிட்டோர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பேரணியில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், பேரணியில் கலந்துகொண்டவர்கள், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக செனறனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.