முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை என சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில், அம்மா உணவகத்தை ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை மு.க.ஸ்டாலின் அரங்கேற்றியுள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை என சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேயர் பிரியா ராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கழக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சர் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக முதலமைச்சர் திகழ்கிறார்கள், அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை.
திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும், ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.