தேவகோட்டை அருகே குடிநீர், சாலை வசதி இல்லாததால் ஊரை காலி செய்யும் கிராம மக்கள்

தேவகோட்டை அருகே குடிநீர், சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் ஊரை காலி செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே என்.மணக்குடி ஊராட்சியைச் சேர்ந்தது பூதவயல் கிராமம். இங்குள்ள தெருக்குழாய்களில் பல ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. இதனால் 3 இடங்களில் தொட்டிகளுடன் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. இதில் 2 ஆழ்துளைக் கிணறுகள் பழுதடைந்தும், தொட்டிகள் சேதமடைந்தும் உள்ளன. ஒரு ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் வந்தாலும், உவர்ப்பாக இருப்பதால் குடிக்க பயன்படுத்த முடியாது. அதுவும் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் கிராமத்தினர் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

இக்கிராமத்துக்கு பின்னலாங்கோட்டையில் இருந்து சாலை செல்கிறது. 3 கி.மீ. தூரமுள்ள இச்சாலையை பல ஆண்டுகளாக சீரமைக்காததால் மண் சாலையாக மாறிவிட்டது. மேலும் கண்மாய் கரையில் இருந்து மண் சரிந்து சாலையையே மூடி விட்டது. இதனால் அவ்வழியாக மழைக்காலத்தில் செல்ல முடியாது. அங்குள்ள கண்மாய் மூலம் 65 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. மடைகள் முழுவதும் சேதமடைந்து விட்டதால், தண்ணீர் வீணாக வெளியேறி விடுகிறது. கண்மாயும் பல ஆண்டுகளாக தூர் வாரவில்லை. சிறிதுநேரம், மழை பெய்தால்கூட 2 நாட்களுக்கு இக்கிராமத்தில் மின்சார விநியோகம் இருக்காது. இதனால் இக்கிராம மக்கள் படிப்படியாக ஊரை காலி செய்து வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து விக்னேஷ் என்பவர் கூறியதாவது: குடிநீர் வராததால் பக்கத்து கிராமங்களுக்கு நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்தோம். இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் போனதால் தற்போது குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஆழ்துளைக் கிணறு பழு தடைந்து தண்ணீர் வராத நேரங்களில், விலைக்கு வாங்கும் நீரையே மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்துகிறோம். இதனால் தண்ணீருக்கே ரூ.500 முதல் ரூ.1,000 வரை மாதம் செலவழிக்கிறோம்.

கண்மாய் கரையில் இருந்து மண் சரிந்து சாலையில் விழுகிறது. ஆனால், தடுப்புகள் அமைத்து சாலையை சீரமைத்து தர மறுக்கின்றனர். இதனால் ஆம்புலன்ஸ், ஆட்டோ கூட எங்கள் கிராமத்துக்கு வர மறுக்கின்றன. இருசக்கர வாகனங்களில் சென்றாலும், மண்ணில் அடிக்கடி சரிந்து விழ நேரிடுகிறது. அதிகாரிகள் கண்மாய் மடைகளை சீரமைத்து தராததால், தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. நாங்களே சேர்ந்து மண் மூட்டைகளை கொண்டு அடைத்தோம். 30 குடும்பங்கள் இருந்த எங்கள் கிராமத்தில் தற்போது 10 குடும்பங்களே உள்ளன. அவர்களும் சில ஆண்டுகளில் ஊரை காலி செய்து வெளியேறும் மனநிலையில் உள்ளனர் என்று கூறினார்.