உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என்ற அம்மாநில அரசின் உத்தரவுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள வணிகர்கள் தங்கள் கடைகளில் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் முழுப் பெயரையும் எழுத வேண்டும் என்று உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசுகள் உத்தரவிட்டிருக்கின்றன. இந்த வழித்தடத்தில் இறைச்சி விற்பனையைத் தடை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை, பொருளாதார ரீதியாக புறக்கணிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உணவக உரிமையாளர்கள், தங்கள் பெயர்களைக் காட்டும் பெயர்ப்பலகைகளை அமைக்க ஹரித்வார் காவல்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹரித்வார் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் பத்மேந்திர டோபல், “கன்வார் வழித்தடத்தில் உள்ள ஹோட்டல்கள், தாபாக்கள், உணவகங்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் கடைகளில் உரிமையாளரின் பெயரை எழுத வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்கி உள்ளோம். அதைச் செய்யத் தவறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இதனால், பல நேரங்களில், தகராறு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும். அவற்றை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.