“2041-ல் அசாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறும்” – முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா

2041ல் அசாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. 2041க்குள் அசாம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலமாக மாறும். இது உண்மை. இதை யாராலும் தடுக்க முடியாது. அசாமில் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் முஸ்லீம் மக்கள் தொகை சுமார் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இந்துக்களின் மக்கள்தொகை சுமார் 16 சதவீதம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரங்களின்படி அசாமின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் இப்போது 40 சதவீதமாகிவிட்டனர்.

முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் பிராண்ட் அம்பாசிடராக ராகுல் காந்தி மாறினால், அது கட்டுப்படுத்தப்படும். ஏனெனில், அந்த சமூகம் அவர் சொல்வதை மட்டுமே கேட்கிறது” என தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “1951ம் ஆண்டு அசாமில் 12 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள்தொகை தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஒரு பெரிய பிரச்சினை. நாங்கள் பல மாவட்டங்களை இழந்துள்ளோம். இது எனக்கு அரசியல் பிரச்சினை அல்ல. இது எனக்கு வாழ்வா சாவா பிரச்சினை” என்று தெரிவித்திருந்தார்.

ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி, ஹிமந்த பிஸ்வா சர்மாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “1951 ல், முஸ்லிம் மக்கள் தொகை 24.68 சதவீதமாக இருந்தது. அவர் ஒரு பொய்யர். அவர் அசாம் முஸ்லிம்களை வெறுக்கிறார். 1951 ல் அசாம் இருந்தது. நாகாலாந்து, மிசோரம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா அங்கு இல்லை. 2001ல் 30.92 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34.22 சதவீதமாக இருந்தது. அவரது பொய்களால், முழு நிர்வாகமும் முஸ்லிம்களை வெறுக்கிறது” என்று அசாதுதீன் ஒவைசி கூறினார்.