“18 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் முதல் கட்டிடம் மக்கள் கண்ணுக்குத் தெரியும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி நம்பிக்கை 

“இன்னும் 18 மாதங்களில் மதுரை எம்ய்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டிடம் மக்கள் கண்ணுக்குத் தெரியும்” என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி-யான மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான திட்டத்துக்கான நிர்வாகக் குழு தலைவர் பிரசாந்த் லாவண்யா தலைமையில் மாணிக்கம் தாகூர் எம்.பி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் பங்கேற்ற நிர்வாகக் குழு கூட்டம் காணொலி மூலம் இன்று நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு மாணிக்கம் தாகூர் எம்.பி மதுரை எய்ம்ஸ் நிர்வாக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்த் ராவ் உள்ளிட்ட டெல்லி எய்ம்ஸ் அதிகாரிகளுடனான நிர்வாகக் குழுவினருடன் ஆலோசிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் வகுப்புகள் நடத்துவது, மாணவர்கள், ஆசிரியர்கள் நியமனம் பற்றி விவாதிக்கப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை 33 மாதங்களில் இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2026 அக்டோபர் 19-க்குள் அனைத்து விதமான கட்டிடங்களும் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நீண்ட நாள் கனவுத் திட்டமான மதுரை எய்ம்ஸுக்கான பணியில் 10 சதவீதமே முடிந்துள்ளது. இன்னும் 18 மாதங்களில் முதல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, அது மக்களின் கண்ணுக்குத் தெரியும்” என்றார்.