“மதுரையில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார்” – மேயர் இந்திராணி தகவல்

பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவை நடத்துவதற்கான தேதி கேட்டு மாநகராட்சி நிர்வாகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. வியாபாரம், சுற்றுலா மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்காக மதுரைக்கு வந்து செல்லும் மக்களையும் சேர்த்தால், மாநகராட்சியின் ஒரு நாள் குடிநீர் தேவை 268 மில்லியன் லிட்டர். ஆனால், தற்போது 192 மில்லியன் லிட்டர்தான் மாநகராட்சி விநியோகம் செய்கிறது. வைகை அணையிலிருந்து தினமும் 115 மில்லியன் லிட்டர், வைகை ஆற்றுப் படுகையிலிருந்து 47 மில்லியன் லிட்டர், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் லிட்டர் உள்பட மொத்தம் 192 மில்லியன் லிட்டா் குடிநீர் பெறப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

குடிநீர் பற்றாக்குறையை போக்க, கடந்த அதிமுக ஆட்சியில் அம்ரூத் திட்டத்தில் ரூ.1,295.76 கோடி மதிப்பிட்டில் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், முல்லை பெரியாறு லோயர் கேம்ப்பிலிருந்து மதுரை நகருக்கு கூடுதலாக 125 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. தற்போது லோயர் கேம்ப் பகுதியில் இருந்து குடிநீர் எடுத்து வந்து பன்னைப்பட்டியில் சுத்திகரித்து, மதுரை மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் ஏற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டம் முழுமையடைந்து மதுரைக்கு குடிநீர் வந்தும், இந்த திட்டம் ஏன் இன்னும் தொடங்கப்படவில்லை என்பது பொதுமக்கள் கேள்வியாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதமே, இந்த திட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் தினமும் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி கூறியது. ஆனால், தற்போது வரை வெள்ளோட்டம் அடிப்படையிலே பெரியார் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேயர் இந்திராணி, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் இந்த திட்டத்தை விரைவாக முடித்து நடைமுறைப்படுத்த தொடர்ச்சியாக ஆய்வக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், இந்த திட்டம் தாமதமாகி வருவதால் எப்போது இந்தத் திட்டம் தொடங்கப்படும்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து மேயர் இந்திராணி கூறியது, “பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. பைபாஸ் ரோட்டில் வைகை ஆற்றை கடந்து குடிநீர் விநியோகக் குழாய் கொண்டு செல்லும் பணி மீதமுள்ளது.

இதுபோல், சில முக்கிய சாலை சந்திப்புகளில் குடிநீர் விநியோகக் குழாய் பதிக்கும் பணியும் முடிக்க வேண்டி உள்ளது. இந்த பணிகள் முடிந்தால் 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிடும். ஆனால், இந்த பணிகளுக்காக இந்த குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது தடைபடாது. இந்த குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பதிலும் எந்தச் சிக்கலும், தாமதமும் இல்லை. அதனால், எந்த நேரத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கலாம்.

முதல்வர் கையால் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக தேதி கேட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை மதுரைக்கு வந்து தொடங்கி வைப்பார். ஆரப்பாளையம், பார்க் டவுன் ஆகிய இரண்டு இடங்களில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்கிறோம். இதில் ஏதாவது ஒரு இடத்தில் தொடக்க விழா நடத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கும்,” என்று மேயர் இந்திராணி கூறினார்.