புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சு போட்டி

நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்கப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த முறையில் புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு  முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் இன்று நடைபெற்றது. மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்  முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) கூ.சண்முகம் கலந்து கொண்டு தலைமை தாங்கி முதல் பரிசான ரூபாய் 5 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை பொன்னமராவதி லயன்ஸ் மெட்ரிக்பள்ளி மாணவி ஜெயபாரதிக்கும், இரண்டாம் பரிசான ரூ 3 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை புத்தாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சக்தி சஹானாவிற்கும், மூன்றாம் பரிசான ரூபாய் 2 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை கல்லாலங்குடி ஸ்ரீ சுபபாரதி மெட்ரிக் பள்ளி மாணவி விஜய வர்ஷினிக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசாக தலா ரூ 2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை பி.அழகாபுரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி  உமாமகேஸ்வரி, ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி தமனாரோஸ்னி ஆகியோருக்கும் வழங்கி பாராட்டி பேசினார்.

முன்னதாக வந்திருந்த அனைவரையும் மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் வரவேற்று பேசினார். நடுவர்களாக தமிழாசிரியர்கள் பாலசுப்ரமணியன், ரேவதி, ஜெயந்தி ஆகியோர் செயல்பட்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி,  தமிழ் வளர்ச்சித்துறையின் சுப்புராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜ.சபீர்பானு வழிகாட்டலுடன் தமிழ் வளர்ச்சித் துறையினைச் சேர்ந்த குழுவினர் செய்திருந்தனர்.