குடிமைப் பணித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக போலியாக மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்ததாக புகாருக்குள்ளான பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பூஜாவின் விண்ணப்பத்தை ரத்து செய்யவும் கோரியுள்ளது.
இது குறித்து யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடிமைப் பணி தேர்வு 2022-க்கு பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளரான பூஜா மனோரமா திலிப் கேத்கரின் தவறான செயல் காரணமாக விரிவான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் அவர் தனது பெயர், தந்தை மற்றும் தாயின் பெயர், அவரது புகைப்படம், கையெழுத்து, அவரது மின்னஞ்சல் முகவரி, அலைப்பேசி எண் மற்றும் முகவரியை போலியாக கொடுத்து தேர்வு விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் அவருக்கு (பூஜா கேத்கர்) எதிராக காவல் துறையில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்வது (எஃப்ஐஆர்) உள்ளிட்ட தொடர் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதேபோல், 2022-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வுக்கான அவரது விண்ணப்பத்தை ரத்து செய்வதற்கான சோகாஸ் நோட்டீஸையும் (எஸ்சிஎன்) பிறப்பித்துள்ளது. தனது அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதில் யுபிஎஸ்சி அரசியலமைப்பினால் அதற்கு வழங்கப்பட்ட ஆணைகளை உறுதியாக கடைபிடிக்கிறது. மேலும், தேர்வுகள் நடத்துவது உள்ளிட்ட அதன் அனைத்து செயல்பாடுகளையும் எந்தவித சமரசமமும் இன்றி மிகவும் உயர்ந்த விடாமுயற்சியுடன் நிறைவேற்றுகிறது. யுபிஎஸ்சி, அதன் அனைத்து தேர்வு செயல்முறைகளின் புனித தன்மையையும், ஒருமைப்பாட்டையும் வெளிப்படையாகவும் விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் உறுதி செய்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வில் (யுபிஎஸ்சி) தேர்ச்சி பெற்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் பூஜா மனோரமா திலீப் கேத்கர். இவர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளானார். பார்வைக் குறைபாடு, மூளை திறன் குறைபாடு ஆகியவை தனக்கு உள்ளதாகக் கூறி மாற்றுத் திறனாளி சான்றிதழ் கோரியும் அவர் விண்ணப்பித்து இருப்பதாக புகார் எழுந்தது. மேலும் புனேயில் அவர் உதவி ஆட்சியராக இருந்தபோது, பதவியை துஷ்பிரயோகம் செய்து பிறரை மிரட்டியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் பூஜா சிக்கினார். இதைத் தொடர்ந்து, அவர் வாஷிம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பின், அவர் தொடர்பான முழு விவரங்களை ஆய்வுசெய்ய மத்திய பணியாளர் துறையின் கூடுதல் செயலர் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்பிபிஎஸ் படிப்பதற்காக 2007-ம் ஆண்டில் அவர் ஓபிசி இடஒதுக்கீட்டைத் தவறாகப் பயன்படுத்தினார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் மாற்றுத் திறனாளி இல்லை என்று அவர் எம்பிபிஎஸ் படித்த கல்லூரியின் இயக்குநர் தெரிவித்தார். 2007-ம் ஆண்டில் புனேயில் உள்ள காஷிபாய் நவாலே மருத்துவக் கல்லூரியில் பூஜா கேத்கர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.