காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய கிராமம் ஒன்றில் இன்று அதிகாலை தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். என்றாலும் இந்த தகவல் ராணுவத்தால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் காஸ்திகர் பகுதியில் உள்ள பாடா கிராமத்தில் அதிகாலை 2 மணி அளவில், தீவிரவாதிகளைத் தேடும் பணிக்காக அங்குள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருவதாகவும் கூறினர்.
தோடா மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் தீவிரவாதிகளுடன் நடந்த மூன்றாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். முன்னதாக தோடா மாவட்டத்தின் தேஸா பகுதியில் கடந்த திங்கள்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். கிராமப் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் சிலர் தீவிரவாதிகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். ஜம்மு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் இங்கு நடந்த தீவிரவாத தாக்குதலில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இரவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு கேப்டன் உட்பட நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தேசா மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்தத் தேடுதல் வேட்டை இன்று நான்காவது நாளை எட்டியது. இதனிடையே செவ்வாய் மற்றும் புதன்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் தேசா காடுகளில் இரண்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
கடந்த 2005ம் ஆண்டு தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட தோடா மாவட்டம் ஜூன் 12ம் தேதி முதல் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சத்தர்கலாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்புப்படை வீரர்கள் காயமடைந்தனர், அதற்கு அடுத்த நாள் கந்தோவில் நடந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.
ஜூன் 26ம் தேதி தோடா மாவட்டத்தின் கந்தோ பகுதியில் நாள் முழுவதும் நீண்ட தேடுதல் வேட்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜூலை 9ம் தேதி காடி பாக்வா காட்டுப்பகுதியில் மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்தாண்டு தொடக்கம் முதல் ஜம்மு பகுதியின் ஆறு மாவட்டங்களில் நடந்த 12க்கும் அதிகமான தீவிரவாத தாக்குதலில் 11 பாதுக்காப்பு படை வீரர்கள், ஒரு கிராம பாதுகாப்பு படை வீரர், 5 தீவிரவாதிகள் உட்பட இதுவரை 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஜூன் 9ம் தேதி ரியாசி மாவட்டத்தின் ஷிவ் கோரி கோவிலில் இருந்து திரும்பிய 7 யாத்ரீகர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.