உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், என்.கோட்டீஸ்வர் சிங் பதவியேற்பு

நீதிபதிகள் என்.கோட்டீஸ்வர் சிங் மற்றும் ஆர்.மகாதேவன் இருவரும் இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து முதல் முறையாக மணிப்பூரில் இருந்து கோட்டீஸ்வர் சிங் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இருவருக்கும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இரண்டு நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டதன் மூலம், உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி உட்பட, அதன் முழு நீதிபதிகள் எண்ணிக்கையான 34-ஐ அடைந்துள்ளது.

வரும் செப்படம்பர் 1ம் தேதி நீதிபதி ஹிமா ஹோலி ஓய்வு பெறும் வரை உச்ச நீதிமன்றம் அதன் 34 நீதிபதிகளுடன் இயங்கும். அவரைத் தொடர்ந்து தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நவம்பர் 10-ம் தேதி ஓய்வு பெறுகிறார். நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோரின் ஓய்வுக்கு பின்னர் மேலும் இரண்டு இடங்கள் காலியாகும்.

முன்னதாக, ஜுலை 11-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம் நீதிபதிகள் கோட்டீஸ்வர் சிங் மற்றும் மகாதேவன் ஆகியோரின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. கொலீஜியத்தின் பரிந்துரையை ஜூலை 16-ம் தேதி மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. நீதிபதி மகாதேவனின் பெயருடன் கோட்டீஸ்வர் சிங்-ன் பெயரை பரிந்துரைத்தப்பின்னர் கொலீஜியம் கூறுகையில், “உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் (சிங்) நியமிக்கப்பட்டால், வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும், குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் நீதிபதியாக அவர் இருப்பார்” என்று தெரிவித்திருந்தது.

நீதிபதி கோட்டீஸ்வர் சிங், கடந்த 2011, அக்டோபரில் குவாஹாத்தி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மணிப்பூரில் உயர் நீதிமன்றம் உருவாக்கப்பட்டதும் அங்கு மாற்றப்பட்டார். கடந்த 2023, பிப்ரவரியில் அவர், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் 2028ம் ஆண்டு பிப்ரவரியில் தனது 65 வயதில் ஓய்வு பெறுவார்.

அதேபோல். நீதிபதி மகாதேவனின் பெயரைப் பரிந்துரைத்த போது கொலீஜியம், “தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மகாதேவனின் நியமனம் உச்ச நீதிமன்ற அமர்வுக்கு பன்முகத்தன்மையைக் கொண்டு வரும்” என்று குறிப்பிட்டிருந்தது.

இந்தநிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், நீதிபதி மகாதேவனின் தேர்வுக்கு கொலீஜியம் முக்கியத்துவம் அளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. நீதிபதி மகாதேவன் 1963ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி பிறந்தார். வரும் 2028ம் ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெறுவார்.