விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரத்தில், மகாராஷ்டிராவில் முறைகேடு புகாரில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தாயார் மனோரமா கேத்கரை போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தாயார் மனோரமா கேத்கர், புனேவின் முல்ஷி தெஹ்சிலில் உள்ள தத்வாலி கிராமத்தில் நிலத் தகராறு ஒன்றில் துப்பாக்கியை பயன்படுத்தி விவசாயிகளை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, மனோரமா தலைமறைவானார். விவசாயி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வீடியோ வெளியானதை அடுத்து மனோரமா மற்றும் அவரது கணவர் திலீப் கேத்கர் ஆகியோரை போலீஸார் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த வீடியோ கடந்த ஆண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ராய்காட் மாவட்டத்தில் உள்ள மகத் என்ற ஊரில் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோரமா, அவரது கணவர் மற்றும் 5 பேரை கண்டுபிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன. இதே போல, அவரது கணவரும், ஓய்வு பெற்ற மகாராஷ்டிர அரசு அதிகாரியான திலீப், சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக, யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்றவர் பூஜா கேத்கர், மகாராஷ்டிராவின் புனே உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அதிகார துஷ்பிரயோகம் குறித்த புகாரின் பேரில் வாசிம் மாவட்டத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.
இதையடுத்து ஓபிசி இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியது, பார்வைத் திறன் குறைபாடு மற்றும் மூளைத்திறன் குறைபாடு இருப்பதாக பொய்யான தகவலை அளித்ததாக பூஜா மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பூஜா கேத்கரின் பூஜா கேத்கரின் ஐஏஎஸ் பயிற்சி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.