மின் கட்டண உயர்வு மற்றும் ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வழங்குவதை நிறுத்த முயற்சிப்பதை கண்டித்து ஜூலை 23-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில் 3-வது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்தவும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் மற்றும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயிலை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான 82 மாவட்டங்களிலும் ஜூலை 23-ம் தேதி காலை 10.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.