புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் : திமுக எச்சரிக்கை

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மீண்டு்ம் திறக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. அவற்றைத் திறக்கக்கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் போடாமல் ரேஷன் கடைகளை திறந்து அரிசி மற்றும் உணவுப் பொருட்களை தர கடந்த மக்களவைத் தேர்தலின் போது முதல்வர் ரங்கசாமியிடம் மக்கள் வலியுறுத்தினர். தேர்தல் முடிந்த நிலையிலும் இதுவரை ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்களில் நியாய விலைக்கடைகளில் அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களோடு, எண்ணெய், பருப்பு வகைகள், மாவுப் பொருட்கள், காய்கறிகளும் விநியோகம் செய்யப்படுகின்றன. இவைமட்டுமல்லாது அன்றைய சந்தையில் விலையேறி அரிதாக உள்ள பொருள்களும் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுவது மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் உள்ளன. ஆனால் புதுச்சேரி இதற்கு விதிவிலக்காக ரேஷன் கடைகளே இல்லாத ஒரே மாநிலமாக விளங்குவது மக்கள் விரோதச் செயலாகும். கடந்த காலங்களில் ஏன் ரேஷனில் அரிசி போடுவது நின்று போனது என்பது இன்றைய முதல்வருக்கும் ஊருக்கும் தெரியும். மத்திய அரசின் கொள்கை திணிப்புக்கு உடன்பட்டே ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இக்கடைகளை நம்பியிருக்கும் லட்சக் கணக்கான மக்களும், நூற்றுக் கணக்கான ஊழியர்களும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்த துறையை கையில் வைத்திருக்கின்ற பாஜக அமைச்சரும் கடந்த மூன்று ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது உடனடியாக ரேஷன் கடைகளை திறந்து விடுவோம் என்று முதல்வர் ஒப்புதல் கொடுத்தார். ஆனால், இதுவரை ரேஷன் கடைகளை திறக்க புதுச்சேரி அரசிடம் எந்த நடவடிக்கையும் இல்லை. புதுச்சேரி அரசியலில் பாஜக–வுக்கும், என்.ஆர்.காங்கிரசுக்கும் இடையில் நடக்கும் கூட்டணி சண்டைகூட பதவிக்காகத்தானே தவிர மக்களுக்காக அல்ல.

ரேஷன் கடைகளை திறக்க தாமதமாவதற்குக் காரணம் அதில் கிடைக்கும் கமிஷனும், கரப்ஷனும் தானோ என்ற அச்சம் தொடர்கிறது. செயலற்ற இந்த அரசு மீது ரேஷன் கடைகளை திறக்கச் சொல்லும் மக்களின் கோபம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே, பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டும், நியாய விலைக்கடையே இல்லாத மாநிலம் புதுச்சேரி என்ற அவப்பெயரை நீக்கிட வேண்டியும், உடனடியாக ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்று மீண்டும் இந்த அரசை திமுக வலியுறுத்துகிறது.

அதிமுக்கியமான இத்துறையை முதல்வரின் அதிகாரத்திற்குள் கொண்டு வந்தால் செயல்பாடு விரைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து இந்த அரசு மெத்தனம் காட்டுமேயானால் மாநில அளவில் மட்டுமின்றி ஒவ்வொரு ரேஷன் கடை முன்பாகவும் பொதுமக்களையும், ஊழியர்களையும் திரட்டி மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும்” என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளார்.