நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய முயற்சி செய்வேன் என இன்று புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய மு.அருணா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட வணிக வரித்துறை இணை ஆணையராக பணியாற்றிய லட்சுமி பவ்யா தன்னேரு நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் நீலகிரி மாவட்டத்தின் 116-வது ஆட்சியர் ஆவார். இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியராக லட்சுமி பவ்யா தன்னேரு தனது அலுவலகத்தில் கையெழுத்திட்டு பொறுப்பற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதிய ஆட்சியர் லட்சுமி, “இங்கு மாவட்ட ஆட்சியராக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி. நான் வணிகவரித் துறை இணை ஆணையராக பணியாற்றி உள்ளேன். 156 ஆண்டு பாரம்பரியம் கொண்ட நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றுவதில் மகிழச்சி. மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுடன், மாவட்டத்தின் கடைக்கொடி மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய முயற்சி செய்வேன். அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என ஆட்சியர் கூறினார். புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட லட்சுமி பவ்யா தன்னேருவுக்கு அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலதரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.