அசாமில் மாறிவரும் மக்கள் தொகை தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்றும், மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் தொகை தற்போது 40 சதவீதமாக அதிகரித்து உள்ளது என்றும் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா தெரிவித்துள்ளார்.
ராஞ்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா கூறுகையில், “மாறிவரும் மக்கள் தொகை எனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அசாமில் தற்போது முஸ்லிம் மக்கள் தொகை 40 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த 1951-ம் ஆண்டு அது 12 சதவீதமாக இருந்தது. நாங்கள் பல மாவட்டங்களை இழந்துவிட்டோம். இது எனக்கு அரசியல் பிரச்சினை இல்லை. எனக்கு இது வாழ்வா சாவா பிரச்சினை” என்று தெரிவித்தார்
முன்னதாக ஜூலை 1-ம் தேதி எந்த ஒரு சமூகத்தின் பெயரையும் குறிப்பிடாமல் பேசிய ஹிமந்தா, குறிப்பிட்ட மதத்தினைச் சேர்ந்த சில பிரிவு மக்களால் உண்டாகும் குற்ற நடவடிக்கைகள் கவலைக்குரியதாக இருக்கிறது என்று தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்கள் குற்றங்கள் செய்கிறார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் நடக்கும் சமீபத்திய சம்பவங்கள் கவலைக்குரியதாக இருக்கின்றன” என்று தெரிவித்திருந்தார்.
ஜூன் 23-ம் தேதி ஹிமந்தா சர்மா,“மத்தியில், மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுகளின் வளர்ச்சிப் பணிகளை கணக்கில் கொள்ளாமல், மக்களவைத் தேர்தலில் வங்கதேசத்தில் இருந்த வந்த சிறுபான்மை சமூகத்தினர் காங்கிரஸுக்கு வாக்களித்தனர். அசாமில் வங்கதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிறுபான்மை சமூகத்தினரே குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அசாமில் உள்ள 14 தொகுதிகளில், பாஜக, ஏஜிபி-யூபிபிஎல் கூட்டணி 11 இடங்களைக் கைப்பற்றியது மீதமுள்ள மூன்று இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்தப் பொதுத்தேர்தலில், வடகிழக்கு மாநிலங்களில் சில இடங்களை பாஜக கூட்டணி இழந்திருத்தது. அங்கு மொத்தமுள்ள 24 தொகுதிகளில் 15 இடங்களில் பாஜக கூட்டணி வென்றது. காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளில் வென்றிருந்தது. அக்கட்சி 2019ம் ஆண்டு தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த அசாம் முதல்வர், “ஒரு குறிப்பிட்ட மதத்தினர் இந்த மாநிலங்களில் எங்கள் அரசுக்கு எதிராக வெளிப்படையாக சென்றனர். இந்த மாநிலங்கள் குறிப்பிட்ட அளவிலான மக்கள் அந்த மதத்தினை பின்பற்றுகின்றனர். அதனால் இந்த வித்தியாசம் ஏற்பட்டது. அது அரசியல் தோல்வியில்லை. ஏனென்றால் மதத்துடன் யாராலும் மோத முடியாது” என்று கூறியிருந்தார்.