சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், பாதிக்கப்படும் மற்றும் விழிப்புணர்வு இல்லாத பொதுமக்களுக்கு சட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம் வருமாறு: நம் நாட்டில் 1993-ம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அனைத்து மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
சமீபத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிக்கான அணுகல்’ என்ற தலைப்பில் விவாதத்தை நடத்தியது. அதில் சில பரிந்துரைகள் வெளியிடப்பட்டன. அவற்றில், ‘பல்கலைக்கழகங்கள், சட்டக் கல்லூரிகளில் உதவித் திட்டங்கள் ஆய்வு சார்ந்ததாக இருக்க வேண்டும். சட்ட மாணவர்களால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கு சட்ட உதவிகள் மாணவர்களால் வழங்கப்பட வேண்டும்’ என்பன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பரிந்துரைகள் மீது அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் தேவையான நடவடிக்கைககள் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.