டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய கல்வி அமைச்சருடன் ஆளுநர் ரவி சந்திப்பு

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான ஆகியோருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவை நேற்று சந்தித்த நிலையில் அமித் ஷா உடன் ஆலோசனை நடத்தினார்.

அமித் ஷா உடனான ஆலோசனை குறித்து ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில், “உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன். நமது மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனான சந்திப்பு குறித்து, “மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, தமிழகத்தில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்தேன். திறன் மற்றும் கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட அவருக்கு மிகவும் நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் கள்ளச் சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரை சந்தித்து மனு அளித்தன. சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துமாறு பாஜக வலியுறுத்தியுள்ளது.

இந்த சூழலில், 5 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை அவர் நேற்று சந்தித்து பேசினார். தமிழக சட்டம் – ஒழுங்கு நிலவரம், பல்வேறு திட்ட செயல்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசித்துள்ளனர். “பிரதமரை சந்தித்து, தமிழக மக்களின் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்கு பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று எக்ஸ் வலைதள பக்கத்தில் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். ஆளுநர் 19-ம் தேதி சென்னை திரும்புவார் என ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.