தென் மாவட்டங்களைச் சேர்ந்த குண்டர் சட்ட கைதிகளின் மேல்முறையீடுகளை விசாரிக்க மாநில அறிவுரை கழகத்தின் கிளையை மதுரையில் தொடங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய குற்றவாளிகள், போதைப் பொருள் மற்றும் தமிழக அரசின் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் ஓர் ஆண்டு சிறையில் இருக்க வேண்டும்.
குண்டர் சட்ட கைதிகள் அந்நடவடிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னையிலுள்ள மாநில அறிவுரை கழகத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அந்த மேல்முறையீட்டு மனுவை அறிவுரை கழகம் விசாரித்து மனுவை ஏற்றுக் கொண்டால் விடுதலை செய்யப்படுவர். நிராகரித்தால் ஓர் ஆண்டு சிறையில் அடைக்கப்படுவர். குண்டர் சட்ட கைதை எதிர்த்து சென்னையிலுள்ள மாநில அறிவுரைக் கழகத்தில் மேல்முறையீடு செய்யப்படும் போது, தென் மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகளை சென்னைக்கு அழைத்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
தமிழகம் முழுவதிலிருந்தும் மேல்முறையீடு செய்வதால் மாநில அறிவுரை கழகத்தில் வழக்குகள் தேக்கமாகிறது. எனவே, தமிழகத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த குண்டர் சட்ட கைதிகளின் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்க மாநில அறிவுரைக் கழகத்தின் கிளையை மதுரையில் அமைக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. எனவே மனு தொடர்பாக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும். விசாரணை ஜூலை 22-க்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.