மின் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் : ஓபிஎஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மின் கட்டண உயர்வு ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் மாதமொன்றுக்கு சராசரியாக குறைந்தபட்சம் 500 ரூபாய் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு என தனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து வரிகளையும் உயர்த்தி தமிழ்நாட்டு மக்களை ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளாக்கியுள்ள திமுக அரசு, மீண்டும் மின் கட்டண உயர்வை அறிவித்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

மாதம் ஒரு முறை மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடையலாம் என்றும் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அனைத்து பயனீட்டாளர்களுக்குமான மின் கட்டணத்தை பன்மடங்கு திமுக அரசு உயர்த்தியது. இதனால், ஏழையெளிய, நடுத்தர மக்கள் கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இந்தச் சுமையிலிருந்து பொதுமக்கள் மீண்டு வருவதற்குள்ளாக, மேலும் ஒரு நிதிச்சுமை அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 4.83 விழுக்காடு மின் கட்டண உயர்வை நேற்று அறிவித்துள்ளது.

இதன்படி, 400 யூனிட் வரையிலான வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் 4 ரூபாய் 60 காசிலிருந்து 4 ரூபாய் 80 காசாகவும்; 401 முதல் 500 யூனிட் வரையிலான மின் கட்டணம் 6 ரூபாய் 15 காசிலிருந்து 6 ரூபாய் 45 காசாகவும்; 501 முதல் 600 யூனிட் வரையிலான மின் கட்டணம் 8 ரூபாய் 15 காசிலிருந்து 8 ரூபாய் 55 காசாகவும்; 601 முதல் 800 யூனிட் வரையிலான மின் கட்டணம் 9 ரூபாய் 20 காசிலிருந்து 9 ரூபாய் 65 காசாகவும்; 801 முதல் 1000 யூனிட் வரையிலான மின் கட்டணம் 10 ரூபாய் 20 காசிலிருந்து 10 ரூபாய் 70 காசாகவும்; 1000 யூனிட்டிற்கு மேலான மின் கட்டணம் 11 ரூபாய் 25 காசிலிருந்து 11 ரூபாய் 80 காசாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு யூனிட்டிற்கு குறைந்தபட்சம் 20 காசிலிருந்து 55 காசு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, தொழிற்சாலைகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 35 காசாகவும், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 40 காசாகவும், மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், ரயில்வே உள்ளிட்டவற்றிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 35 காசாகவும், தற்காலிக மின் இணைப்பிற்கான கட்டணம் ஒரு யுனிட்டிற்கு 60 காசாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மின் கட்டண உயர்வு ஒவ்வொரு குடும்பத்தின்மீதும் மாதமொன்றுக்கு சராசரியாக குறைந்தபட்சம் 500 ரூபாய் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். வேளாண் வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும், இளைய சமுதாயத்தினர் முன்னேற்றம் அடைவதற்கும் முக்கிய காரணியாக விளங்குவது மாறி வரும் இன்றைய நவீன வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் மின்சாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த நிலையில், இந்த மின் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் மேலும் உயர வழிவகுக்கும். வாடகைக்கு குடியிருக்கும் ஏழையெளிய மக்கள் கூடுதல் பளுவை ஏற்கும் நிலை உருவாகும். தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள் இந்தக் கூடுதல் மின் கட்டணத்தை பொதுமக்கள் மீது திணிக்கும். தமிழக வரலாற்றிலேயே இவ்வளவு குறுகிய காலத்தில் மின் கட்டண உயர்வு அறிவித்திருப்பது இதுவே முதல் தடவை என்று கருதுகிறேன்.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, மக்கள்மீது கூடுதல் நிதிச் சுமையை திணிக்கும் நடவடிக்கைகளை எடுக்கிறதே தவிர, மக்கள் மகிழும்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. திமுக அரசின் இந்த நடவடிக்கை மக்கள் விரோதச் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. ஒருவேளை திராவிட மாடல் என்றால் அதற்கு இன்னொரு பெயர் மக்கள் விரோதச் செயல் போலும்.

நீதி தவறி ஆட்சி நடத்தும் மன்னர் மக்களையும், பொருளையும் ஒரு சேர இழப்பார் என்ற திருவள்ளுவரின் வாய்மொழியினை மனதில் நிலைநிறுத்தி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.