காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை, திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்

காவிரி நீரை பெற்றுத் தராத தமிழக அரசைக் கண்டித்தும், காவிரி நீரை தமிழகத்துக்குத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூரில் இன்று காலை விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக காவிரி உரிமை மீட்புப் குழு சார்பில் இன்று காலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை வகித்தார்.

போராட்டத்தில், கர்நாடகாவில் போதிய மழை பெய்தும் காவிரியில் தண்ணீர் விடாத கர்நாடக அரசைக் கண்டித்தும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீரை விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடாத மத்திய அரசைக் கண்டித்தும், கர்நாடக அரசிடம் பேசி உரிய நீரை பெற முயற்சி எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில், காவிரி நீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூரில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தஞ்சை ரயில் நிலையத்தில் வேளாங்கண்ணி செல்லும் ரயிலை மறித்த விவசாயிகள் மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.உலகநாதன் தலைமை வகித்தனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில், மன்னார்குடி – மயிலாடுதுறை பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தம்பு சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் துரை அருள் ராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ரயில் மறியல் போராட்டத்தில் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மற்றும் மன்னார்குடி ஒன்றிய நகர பகுதி கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதில், “கர்நாடக அரசு, தொடர்ச்சியாக காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவுகளை மதிக்காமல் தமிழகத்துக்கு தண்ணீர் தராமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது. மேலும், கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்து வருவதால் தமிழகத்தில் குறுவை சாகுபடி சுமார் ஆறு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெறாமல் பொய்த்துவிட்டது. இதனால் சுமார் பத்து லட்சம் விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதற்கெல்லாம் கர்நாடக அரசு பொறுப்பேற்க வேண்டும். மத்திய அரசும் தமிழகத்துக்கான தண்ணீரைப் பெற்றுத் தராமல் தட்டிக் கழிப்பதை கைவிட வேண்டும்” எனக் கூறியும் கர்நாடக மற்றும் மத்திய அரசுகளைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ரயில் மறியல் போராட்டத்தால் மன்னார்குடி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் ரயில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர்.

இதேபோல், கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீரைத் திறந்துவிடக் கோரியும் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இன்று காலை சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து தமிழ்நாடு விவசாய சங்க கடலூர் மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமையில் விவசாய சங்கத்தினர் சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர். அப்படி ஊர்வலமாகச் சென்றவர்கள், மதியம் சுமார் 12 மணி அளவில் சென்னையிலிருந்து திருச்சி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.

விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பிரகாஷ், சிதம்பரம் நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் மூஸா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அரங்க தமிழ் ஒளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், நகர நிர்வாகி தமீம் முன் அன்சாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தேன்மொழி உள்ளிட்ட பலர் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் முடிவில் 10 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். விவசாய சங்கத்தினரின் ரயில் மறியல் போராட்டத்தை முன்னிட்டு சிதம்பரம் ரயில் நிலையத்தில் சிதம்பரம் ஏஎஸ்பி-யான ரகுபதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.