பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை சென்னை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதுஒருபுறம் இருக்க ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர். முதல் கட்டமாக, தலைமறைவான கொலையாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் சிக்னல்கள் மூலம் துப்பு துலக்கினர். இதில், ஆன்லைன் உணவு விநியோகிக்கும் ஊழியர்கள் போல வேடமிட்டு, நோட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலைக் குற்றவாளிகளை தனிப்படைப் போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர்.
இதனிடையே, ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), அவரது கூட்டாளிகள் பெரம்பூர் பொன்னுசாமி நகர் திருமலை (45), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மணிவண்ணன் (26), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) ஆகியோர் உட்பட 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பின்னர், அனைவரும் நீதிமன்ற காவலில் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் பட்டினப்பாக்கத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கு பழிக்குப் பழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கூட்டாளிகளுடன் சென்று தீர்த்துக் கட்டியதாக பொன்னை பாலு வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர். பொன்னை பாலு சொன்னது உண்மையா? அல்லது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? கூலிப்படைக்கு பணம் கொடுக்க நிதி உதவி மற்றும் பண உதவி செய்தவர்கள் யார்? கொலைத் திட்டம் எப்படி போடப்பட்டது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரிவதற்காக சிறையில் உள்ள 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர்.
அதன்படி, கடந்த 11-ம் தேதி, 11 பேரையும் 5 நாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, 11 பேரிடமும் சென்னை பரங்கிமலை பகுதியில் தனித்தனியாகவும், குழுவாகவும் விசாரிக்கப்பட்டது. குறிப்பாக, வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பொன்னை பாலுவிடமும், 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திருவேங்கடத்திடமும் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருவேங்கடத்திடம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மேலும் தகவல்களை திரட்டுவதற்காகவும் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தால் பறிமுதல் செய்யவும் அவரை மணலிக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் இயற்கை உபாதையை கழிக்க வேண்டும் என திருவேங்கடம் சொன்னதால் போலீஸார் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பினார். பின்னர் அவர் மணலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியிலுள்ள ஒரு தகர கொட்டகையில் பதுகினார். அங்கிருந்து வெளியே வரும்படி அவரை போலீஸார் எச்சரித்தும் வரவில்லை. மாறாக திடீரென அங்கு அவர் ஏற்கெனவே பதுக்கி வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து போலீஸாரை நோக்கிச் சுட்டுள்ளார்.
இதையடுத்து போலீஸார் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக மணலி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து மாதவரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் தீபா சம்பவ இடத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், போலீஸ் வாகனத்தில் திருவேங்கடத்தை அழைத்துச் சென்ற போலீஸார், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் தனித்தனியாக அவர் விசாரணை மேற்கொண்டார். இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது
இது ஒருபுறமிருக்க ஆம்ஸ்ட்ராங்கை கொலையாளிகள் எவ்வாறு நோட்டமிட்டு வெட்டிச் சாய்த்தனர் என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பானது. இந்நிலையில் மேலும் ஒரு வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது, அதில், திருவேங்கடம் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு பட்டாக்கத்தியுடன் தப்பிச் செல்கிறார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரு வாகனங்களில் வரும் கொலையாளிகள் திருவேங்கடத்தை தங்களது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு செல்கின்றனர். இந்த வீடியோவும் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.