நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், “நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு கே.பி. சர்மா ஒலிக்கு நல்வாழ்த்துகள். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக பரஸ்பரம் பயனளிக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றுள்ள கே.பி.ஷர்மா ஒலிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, இந்தியாவும் நேபாளமும் தனிப்பட்ட நட்பு மற்றும் கூட்டாண்மை உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
மக்களிடையே வேரூன்றி இருக்கும் உறவுமுறை மற்றும் கலாச்சாரத்தின் ஆழமான தொடர்புகளுடன் கூடியது நமது உறவு. ஒளிமயமான எதிர்காலத்திற்காக பரஸ்பர ஒத்துழைப்பின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த ஒவ்வொரு இந்தியரும் எதிர்நோக்குகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.