“தமிழக மாணவர்கள் கல்வி கற்க எந்தத் தடை வந்தாலும் தகர்ப்போம்” என முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி தொடங்கிவைத்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கல்வி வளர்ச்சி நாளான இன்று (ஜூலை 15) தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.
தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து அவர் உணவு உண்டார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் பேசினார்.
திட்டத்தைத் தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியை உறுதி செய்ய பெற்றோரின் பாசத்தோடு உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த காலை உணவுத் திட்டம். கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது. அது பசியாக இருந்தாலும் சரி நீட் தேர்வாக இருந்தாலும் சரி. அந்தத் தடைகளை நாங்கள் உடைக்கிறோம். முன்பு நாம் நீட் தேர்வை எதிர்த்தபோது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று நம்மை கேள்வி கேட்டனர். இன்று ஒட்டுமொத்த நாடும் நீட் தேர்வை தமிழகத்தின் வழியில் எதிர்க்கிறது. பல தலைவர்கள், மாணவர்கள் அமைப்பினர் தற்போது நீட் தேர்வை எதிர்க்கின்றனர். ஏன், உச்ச நீதிமன்றமே நீட் தேர்வைப் பற்றி கேள்வி கேட்கிறது.
கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறதா? அத்தகைய ஆக்கபூர்வமான செயலை மத்திய அரசு செய்யுமா?. மாணவர்கள் படிக்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதே எனது எண்ணம். அது பசியோ, நீட் தேர்வோ, புதிய கல்விக் கொள்கையோ!. தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான தடை எதுவாக இருந்தாலும், அதை நாங்கள் தகர்ப்போம். கல்வி எனும் சொத்தை மாணவர்கள் பெற உறுதுணையாக இருப்போம்.
மாணவர்களே, நீங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். அதுமட்டும்தான் யாரும் திருட முடியாத சொத்து. நீங்கள் உயர உங்கள் வீடு உயரும் தொடர்ந்து நாடும் உயரும் என்று முதல்வர் பேசினார்.