தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை கலந்தாய்வு வரும் 22-ம் தேதி தொடங்கும் என உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை கலந்தாய்வு வரும் 22-ம் தேதி தொடங்கும். முதலில் விளையாட்டுப் பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். அதன்பின் 29-ம் தேதி பொது கலந்தாய்வு நடைபெறும். செப்.11 வரை கலந்தாய்வு நடைபெறும். கடந்த ஆண்டைவிட இந்த பொறியியல் படிக்க அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளது. நடப்பாண்டு 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் ஆன்லைன் முறையில் கலந்தாய்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இருந்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது. இந்த வருடம் அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல், பாலிடெக்னிக் என எதுவாக இருந்தாலும் உயர்கல்வியில் அதிகமான தமிழக மாணவர்கள் சேர்ந்து படிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இது கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று பொன்முடி தெரிவித்தார்.