“காவல்நிலையத்தில் வந்து சரணடைந்தவர்கள் ஏன் தப்பிக்க வேண்டும்? காணாமல் போன ஒருவரை சுற்றி வளைத்து என்கவுன்ட்டர் செய்ததைத்தான் இந்திய அளவில் இதுவரை பார்த்துள்ளோம். சரண்டர் ஆன ஒருவரை என்கவுன்ட்டர் செய்வது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவசர அவசரமாக என்கவுன்ட்டர் என்ற பெயரில் ஒரு மனிதனுடைய உயிரைப் பறிக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்களே காவல்நிலையத்தில் வந்து சரணடைந்தவர்கள். அவர்கள் ஏன் தப்பிக்க வேண்டும்? காணாமல் போன ஒருவரை சுற்றி வளைத்து என்கவுன்ட்டர் செய்ததைத்தான் இந்திய அளவில் இதுவரை பார்த்துள்ளோம்.
சரண்டர் ஆன ஒருவரை என்கவுன்ட்டர் செய்வது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். அடுத்து மிக முக்கியமான கேள்வி, குற்றவாளிக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? விசாரணைக்கு அதிகாலையில் செல்லவேண்டிய காரணம் என்ன? இந்த வழக்கை தமிழக அரசு முறையான திசையில்தான் கொண்டு செல்கிறதா? இதுதான் தமிழக மக்களின் கேள்வியாக இருக்கிறது. தொடர்ந்து உண்மையை மூடி மறைப்பதற்குத்தான் தமிழக அரசு முயல்கிறதே தவிர, இந்த வழக்கில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பது குறித்து வாய்திறப்பது இல்லை” என்று அண்ணாமலை தெரிவித்தார்.