காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வேண்டும் : முத்தரசன்

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருகும் அறிக்கையில், “தமிழ்நாட்டின் உயிர் நாடியான காவிரி நதி பங்கீட்டில் கர்நாடகத்தின் எதிர்மறை அணுகுமுறை மாநில உறவுகளுக்கு வலு சேர்க்காது. காவிரி நதிநீர் பங்கீடு – தமிழ்நாடு அரசும், மக்களும் நீண்ட பல ஆண்டுகள் போராடியதன் காரணமாக உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது.

இதன்படி காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகிய அமைப்புகள் நிறுவப்பட்டு, தண்ணீர் பகிர்வு முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையிலும் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாகவும், அதன் உணர்வுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருவது எதிர் விளைவுகளை உருவாக்கும் செயலாகும்.

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் வழங்க மறுத்து வருவதால் நடப்பாண்டு காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. தண்ணீர் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சியால் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு, “கர்நாடகம் நாள் தோறும் ஒரு டிஎம்சி (வினாடிக்கு 11 ஆயிரத்து 574 கன அடி) தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கி வர வேண்டும் என கடந்த வியாழக்கிழமை (11.07.2024) உத்தரவிட்டது.

இதனை ஏற்று அமலாக்க வேண்டிய கர்நாடக அரசு, அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்தி ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி, தண்ணீர் வழங்க முடியாது. தினசரி வினாடிக்கு 8000 கன அடி தண்ணீர் தான் தர முடியும் என்று அறிவித்திருப்பது சட்டத்தின் ஆட்சி என்ற முறையை தகர்க்கும் செயலாகும்.

தமிழ்நாட்டு விவசாயிகளும் குடிநீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொள்ளாமல் கர்நாடக முதலமைச்சர் பேச்சும், செயலும் மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு வலுச்சேர்க்காது என்பதை சுட்டிக் காட்டி, காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைகளை அமலாக்குவதுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக முறையாக வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கர்நாடக முதலமைச்சரையும், அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.