பாம்பனில் நடைபெற்று வரும் புதிய ரயில் பாலத்தில் சரக்கு ரயில் பெட்டிகளை இயக்கி சோதனை நடைபெற்றது.
பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் ரயில்வே அமைச்சகம் பாம்பன் கடலில் பழைய பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலத்தினை கட்டுவதற்கான பணிகளை துவங்கியது. புதிய பாம்பன் பாலத்திற்கான திட்டச் செலவு ரூ.535 கோடி. பாலத்தின் நீளம் 2,070 மீட்டர் (6,790 அடி) ஆகும். 101 தூண்களை கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் புதியப் பாலம் எழுப்பப்படுகிறது.
இந்த பாலத்தில் 90 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சில தூண்களில் மட்டும் இணைப்பு கர்டர்களும் அதன் மேல் தண்டவாளமும் அமைக்கப்பட வேண்டும். பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல பாம்பன் சாலைப்பாலத்துக்கு இணையான 27 மீட்டர் உயரத்திற்கு ஹைட்ராலிக் லிஃட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் ஒரு என்ஜினில் 05 சரக்கு பெட்டிகளை இணைத்து சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்காக புதிய ரயில் பாலத்தின் தூண்களில் சென்சார் கருவிகள் பொறுத்தப்பட்டு ரயில்வே தண்டவாளங்கள் முறையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளதா, பாலத்தின் தாங்கும் திறன், அதிர்வுகள் குறித்து கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்.) விஞ்ஞானி பி.அருண்சுந்தரம் தலைமைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இன்னும் இரண்டு மாதத்தில் புதிய பாலத்தின் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து முழுமையான ரயில் என்ஜின் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடைபெறும், என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.