கலைஞர் பெயரில் ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மறைந்த தலைவர் கலைஞர் பெயரில், ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நாணயத்தை கலைஞரின் நூறாவது பிறந்தநாளில் ஜூன் 3ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாணயத்திற்கான அனுமதி கோப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையொப்பம் இட்டதாக தகவல் வெளியானது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி’ என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இந்த நாணயத்தில் இடம் பெற உள்ளது. இந்நிலையில், 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியானது. நாணயத்தின் ஒரு புறம் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 – 2024’ என அச்சிடப்பட்டும், மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என நாணயத்தின் மதிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.