ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் : கூடுதல் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூடுதல் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி, பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம், சந்தோஷ், செல்வராஜ் திருமலை உள்பட11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் குன்றத்தூர் திருவேங்கடம் இன்று அதிகாலை போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த என்கவுன்ட்டர் குறித்து இபிஎஸ், சீமான், அண்ணாமலை போன்றோர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். “என்கவுண்ட்டர் நடவடிக்கை உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்கான நடவடிக்கை” என இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட கூடுதல் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி காட்சிகள் உள்ளன. இதில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கும் காட்சிகளில் கைதானவர்கள் இடம்பெற்றுள்ளனர்

வீடு கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும், ஆள் நடமாட்டம் இருக்கும் தெருவில் முதலில் ஒரு பைக்கில் தனி ஆளாக ஒருவர் அவரை நோட்டமிடுகிறார். பின்னர் ஒவ்வொருவராக வருகிறார்கள். அனைவரும் வந்ததும் ஆம்ஸ்ட்ராங்கை தாக்க ஆரம்பிக்கின்றனர். ஒருவர் ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி காப்பாற்ற வரும் போது உணவு டெலிவரி பாய் டி சர்ட் அணிந்த ஒருவர் அவரை துரத்த, காப்பாற்ற வந்தவர் பின்னோக்கி ஓடுகிறார். தொடர்ந்து மேலும் சிலர் சுற்றி இருந்த தொழிலாளர்களை விரட்டுகின்றனர். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவங்கள் அந்த சிசிடிவி காட்சிகளில் இடம்பெற்றுள்ளன.