‘‘ஜவஹர்லால் நேரு பெற்ற வெற்றியைவிட நரேந்திர மோடி பெற்ற வெற்றி சவாலானது’’ : அமைச்சர் கிஷன் ரெட்டி

ஜவஹர்லால் நேரு பெற்ற வெற்றியைவிட நரேந்திர மோடி பெற்ற வெற்றி சவால்கள் நிறைந்தது என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பாஜக செயற்குழு கூட்டம் இன்று மரப்பாலம் சந்திப்பில் உள்ள தனியார் கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. மாநில தலைவர் செல்வகணபதி எம்பி தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பாஜக அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ. சரவணன்குமார், எம்எல்ஏகள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கர், நியமன எம்எல்ஏகள் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் மாநிலம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசியதாவது: நமது நாட்டில் கடந்த 62 வருடங்களுக்கு பின்னர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தான் தொடர்ந்து 3-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். நேரு காலத்தில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை. சமூக ஊடகங்கள் போன்றவை இல்லை. ஆகவே தற்போது பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பதவி ஏற்றிருப்பது சவாலானதாகும்.

புதுச்சேரி பாஜகவினர் மிகத் தீவிரமாக மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அதன்படி 30 சட்டப்பேரவைத் தொகுதியிலும் அடித்தள மக்களை கட்சி சென்றடைந்துள்ளது. தற்போது சுமார் 3 லட்சம் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. ஆகவே, கட்சி நிர்வாகிகளால் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் காங்கிரஸை மக்கள் புறக்கணித்துள்ளனர். அக்கட்சியால் மக்களவைத் தேர்தலில் 99 இடங்களையே பெறமுடிந்துள்ளது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜகவுக்கு 8 சதவிகித வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. பதவி ஆசையில் காங்கிரஸ் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் பாஜக வாக்குகள் பாதிக்கப்பட்டன. காங்கிரஸ், திமுக கட்சிகள், சனாதனம், இந்து மதம் குறித்து அவதூறு கருத்துகளை கூறி வருகின்றன.

புதுச்சேரி ஆன்மிக பூமியாகும். அரவிந்தர் வாழ்ந்த இடமாகும். ஆகவே, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்த்லுக்கு தற்போதிலிருந்தே பாஜகவினர் உழைக்க வேண்டும். சமூக வலைதளம் மூலம் மக்களிடம் மத்திய அரசு திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும். காங்கிரஸின் ஊழல்களை எடுத்துரைக்க வேண்டும். புதுச்சேரி பாஜகவில் சிறு சிறு பிரச்சினைகள் உள்ளன. அவை பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் வழிகாட்டுதலில் பேசித் தீர்க்கப்படும். மத்திய அரசு, புதுச்சேரி அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கும். புதுச்சேரி வளர்ச்சிக்கு துணைநிற்கும் என்று கிஷன் ரெட்டி பேசினார்.

முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோரை அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நம்சிவாயம், சாய் ஜெ. சரவணன்குமார் மற்றும் பாஜக எம்எல்ஏகள் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.