‘கார்ப்பரேட் நிறுவனங்களை விட நடுத்தர வர்க்கத்திற்கு அதிக வரிச்சுமை’ – ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

கார்ப்பரேட் நிறுவனங்களை விட நடுத்தர வர்க்கத்தினர் கடும் வரிவிதிப்பு சுமையை தொடர்ந்து சுமந்து வருவதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “ஜூலை 23-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2024 ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்த தனிநபர் வருமான வரி வசூல் ரூ.3.61 லட்சம் கோடியாகவும், மொத்த கார்ப்பரேட் வரி வசூல் ரூ.2.65 லட்சம் கோடியாகவும் இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த தரவுகளின் மூலம், நிறுவனங்களை விட தனிநபர்கள் அதிக வரி செலுத்துகிறார்கள் என்று நாங்கள் கூறி வந்தது மீண்டும் உறுதியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவியில் இருந்து வெளியேறியபோது, மொத்த தனிநபர் வருமான வரி வசூல் 21% ஆகவும், மொத்த கார்ப்பரேட் வரி வசூல் 35% ஆகவும் இருந்தது. ஆனால் இன்று, மொத்த வரி வசூலில் கார்ப்பரேட் வரிகளின் பங்கு கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவான 26% ஆக குறைந்துள்ளது. அதே சமயம், மொத்த வரி வசூலில் தனிநபர் வருமான வரியின் பங்கு 28% ஆக உயர்ந்துள்ளது.

தனியார் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் கார்ப்பரேட் வரி விகிதங்கள் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந்தேதி குறைக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. மாறாக, மன்மோகன் சிங் ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% என்ற உச்சத்தில் இருந்த தனியார் முதலீடு 2014-24ல் 29%-க்கும் கீழே சரிந்துள்ளது.

பெருநிறுவன வரி குறைப்பு ரூ.2 லட்சம் கோடியை கோடீஸ்வரர்களின் பாக்கெட்டுகளில் சேர்த்துள்ளது. அதே நேரத்தில் நடுத்தர வர்க்கத்தினர் கடும் வரிவிதிப்பு சுமையை தொடர்ந்து சுமந்து வருகின்றனர்” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.