காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவை நடைமுறைப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓபிஎஸ்

தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சருடன் உடனடியாக பேசி, காவிரி ஒழுங்காற்றுக் குழுவினுடைய உத்தரவினை நடைமுறைப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்,

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கிணங்க, மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தும் வகையில், ஒரு திட்டத்தினை வகுக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்ட இருப்பினும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதாவது, உபரி நீர் மட்டும்தான் திறந்துவிடப்படும், உரிய நீர் திறந்துவிடப்படாது என்று கர்நாடக அரசு தொடர்ந்து அடம்பிடித்து வருகிறது.

தமிழ்நாடு டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடியினை மேற்கொள்ளும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதும், ஜனவரி 28-ஆம் தேது நீர்திறப்பு நிறுத்தப்படுவதும் வழக்கம். மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைந்தபட்சம் 90 டி.எம்.சி. இருந்தால், ஜூன் மாதம் 12-ஆம் தேதி நீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு வெறும் 13 டி.எம்.சி மட்டுமே உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டு நீர் திறக்க முடியாத சூழ்நிலையில், டெல்டா பகுதிகளில் வெறும் நிலத்தடி நீர் விவசாயம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. நீரும், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. நீரும் கர்நாடக அரசால் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதனை கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், ஜூலை 31-ஆம் தேதி வரை தினமும் ஒரு டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு ஒரு டி.எம்.சி. நீரைக்கூட திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. கர்நாடக முதலமைச்சரின் இந்தப் பேச்சு உச்ச நீதிமன்றத்தினை அவமதிப்பதாகும்.

காவிரிப் படுகையில் உள்ள நான்கு நீர்த் தேக்கங்களிலும் மொத்தம் 60 டி.எம்.சி. அடி நீர் மட்டுமே இருப்பில் உள்ளதாகவும், 28 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளதாகவும் கர்நாடக அரசு கூறினாலும், இன்றைய நிலவரப்படி, 129 அடி கொள்ளளவு கொண்ட ஹாரங்கி அணையில் 120.74 அடி நீரும், 117 அடி கொள்ளளவு கொண்ட ஹேமாவதி அணையில் 95.15 அடி நீரும், 65 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 63.68 அடி நீரும், 124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் 104.30 அடி நீரும் இருப்பில் உள்ளது. அதே சமயத்தில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு வெறும் 13 டி.எம்.சி. நீர்தான் உள்ளது. இந்த நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணை முழுமையாக வறண்டுவிடும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிட வேண்டிய கடமையும், பொறுப்பும் கர்நாடக அரசுக்கு இருக்கிறது. அதே சமயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது.

இருப்பினும், இது குறித்து கர்நாடக அரசிடம் பேசவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ தி.மு.க முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது. ‘உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்று சொல்லிக் கொண்டு, உரிமைக்கு குரல் கொடுக்காமல் மௌனம் சாதிப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சருடன் உடனடியாக பேசி, காவிரி ஒழுங்காற்றுக் குழுவினுடைய உத்தரவினை நடைமுறைப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.