ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் – விதிகளைத் திருத்தி உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, மத்திய உள்துறை அமைச்சகம் விதிகளைத் திருத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு இருக்கும் நிர்வாக அதிகாரத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சகம் விதிகளை திருத்தி உள்ளது. காவல்துறை, பொது ஒழுங்கு, அகில இந்திய பணியாளர்கள் தொடர்புடைய விஷயங்களில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் நியமனம் மற்றும் இடமாறுதல் தொடர்பான அதிகாரமும் துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நிதித்துறையின் ஒப்புதலை பெறுவது அவசியம்.

அட்வகேட் – ஜெனரல் நியமனம், சட்ட அதிகாரிகள் நியமனம், வழக்கு தொடர அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது அல்லது மேல்முறையீடு செய்வது தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் அவசியமாக்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019-ன் பிரிவு 55ன் கீழ் திருத்தப்பட்ட விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. பிரிவு 55 என்பது, ஆளுநரின் அதிகாரம் பற்றியது. இந்த பிரிவில்தான் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அட்வகேட் ஜெனரல், சட்ட அதிகாரிகள் (நீதிமன்ற நடவடிக்கைகளில் அட்வகேட்-ஜெனரலுக்கு உதவக்கூடியர்கள்) ஆகியோரை நியமிப்பதற்கான முன்மொழிவை, தலைமைச் செயலாளர் மூலம் சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல், வழக்கு தொடர அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது அல்லது மேல்முறையீடு செய்வது தொடர்பான எந்தவொரு முன்மொழிவும் சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை, தலைமைச் செயலாளர் மூலம் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும். மேலும், சிறைச்சாலைகள், வழக்கு விசாரணை இயக்குநரகம் மற்றும் தடய அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களும் துணைநிலை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு புதிய விதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதோடு, ஜம்மு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர், ஜூன் 2018 முதல் மத்திய ஆட்சியின் கீழ் உள்ளது. செப்டம்பர் 30, 2024 க்கு முன் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.