விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி : பாமக 2-ம் இடம், நாதக டெபாசிட் இழப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, அந்தத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முதலில் தபால் வாக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், முதல் வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.

தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணப்பட்டது. முதல் சுற்று முதலே திமுக வேட்பாளர் சி.அன்புமணி முன்னிலை வகித்து வந்தார். 20-வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296​​ வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வென்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கும், எம்எல்ஏ-க்கள், மாவட்டப் பொறுப்பாளர் கௌதமசிகாமணி ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாமக அவர்களின் பிரச்சாரத்துக்கு ஏற்ப வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த வெற்றி முதல்வரின் சாதனைக்குக் கிடைத்த வெற்றி” என்றார்.

விக்கிரவாண்டியில் திமுக 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்றிருந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, “நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று திமுக வேட்பாளரைக் கேளுங்கள். கடந்த தேர்தலைவிட கூடுதலாக நாங்கள் 2 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளோம். காணை பகுதியில் திமுகவினர் இளம் வாக்காளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தனர். இது தேர்தலே இல்லை. திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர். வருங்காலங்களில் இடைத் தேர்தலை ஏலம் விட்டுவிடுங்கள். இதெல்லாம் தெரிந்துதான் அதிமுக பின்வாங்கியது. இது பண நாயகத்தின் வெற்றி; ஜனநாயகத்தின் மரணம்” என்றார்.