திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், ஆயிலவாடி கிராம ஏரிக்கையில் மண்ணில் புதைந்து மறைந்த நிலையில் இருந்த சோழர் கால சிவன் கோயில் கடந்த 1998 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அதை முழுமையாக மீட்கும் முயற்சியில் தன்னார்வர்கள் ஈடுபட்டனர்.
வரலாற்று ஆய்வாளரான எறும்பூர் கை.செல்வகுமார் கூறுகையில், 1998 ஆம் ஆண்டு ஆயிலவாடி நடுநிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றிய போது அந்தப் பகுதியில் உற்று நோக்கிய நிலையில் கோயில் புதைந்து இருப்பதை கண்டறிந்தேன். கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி கோயிலை மீண்டும் தாம் ஆய்வு செய்த நிலையில் உட்பிரகாரம், மூலவர், நந்தி, மாடம் ஆகியவற்றின் ஆய்வை முன் வைத்து இக்கோயில் சோழர் கால கட்டிடக்கலை சேர்ந்தவை என அறியப்பட்டது.
கோயில் மண்டபத்தின் மேல் பகுதியில் ராகு, கேது சிற்பங்களும் சுற்று சுவர்களில் சிம்ம சிற்பங்கள், கிராம தேவதைகள் உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது. மேலும் கோயிலுக்கு உள்ளே செல்லாமல் மூலவரை தரிசிக்க சிறிய மாடம் ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதும் சிறப்பு அம்சமாக இருந்தது. இது குறித்து தமது ஆய்வின் தகவல்களை 19 .3 .2019 அன்று நாளேடுகளில் விரிவான செய்திகளை வெளியிட்டு பரவி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்தச் செய்திகள் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிரப்பட்டன. இதை அடுத்து அப்போதைய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் மாறுதலாகி சென்று விட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி பிரதோஷத்தன்று இளைஞர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஒருங்கிணைப்பில் சேலத்தில் இருந்து வந்திருந்த உழவாரப் பணி குழு கோயில் உட்பிரகாரத்தில் தூய்மைப் பணியில் மேற்கொண்டு, முதல் பிரதோஷ பூஜை நடத்தப்பட்டது.
இந்தச் செய்தி கூடுதல் தகவலாக சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் தஞ்சை பகுதியை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் உதவியுடன் கோயில் தோற்றத்தை முழுவதுமாக வெளிக் கொண்டு வரும் முயற்சியில் அண்மையில் ஈடுபட்டார். ஏரிக்கரை மண்ணில் புதையுண்டிருந்த சிவன் கோயிலை முழுவதுமாக வெளிக்காட்டிய நிலையில் நாளேடு உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடகங்கள் மீண்டும் இச்செய்தியை வெளியிட்டு பரபரப்பானது.
முதன் முதலில் ஏரி காத்த ஈசன் என்று அறியப்பட்ட ஆலவாய் சுந்தரேஸ்வரர் கோயில் கிபி பனிரெண்டாம் நூற்றாண்டு சேர்ந்த சோழர் காலத்தை நினைவூட்டுவதாக அறிய முடிகிறது. கடந்த வியாழக்கிழமை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் புகழரசி ஆகியோர் ஏரிக்கரையை திடீர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை மழைக்காலத்திற்கு முன் விரைந்து முடிக்க பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டதாக தெரிய வருகிறது. மேலும் மாவட்ட பொதுப்பணித்துறை அமைச்சர், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ஆகியோர் கனிவுடன் பரிசீலனைக்கு ஏற்று கோயிலை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தி புனரமைக்க வேண்டும் என்பது தமது கோரிக்கையாகவும், பொது மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.