ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளரும், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகியுமான கவினின் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் இன்று காலையில் சோதனை நடத்தினர்.
கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலி சான்றிதழ் கொடுத்து ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12-ம் தேதி மனு தாக்கல் செய்த நிலையில் விசாரணை 3 முறை ஒத்திவைக்கப்பட்டு விசாரணைக்கு பின் கடந்த 25-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில் சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி புகார் அளித்தார். இவ்வழக்கு வாங்கல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 22-ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரது சிகிச்சையின்போது தான் உடனிருக்க வேண்டும் எனக் கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு மீண்டும் ஜூலை 1-ல் மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, சார் பதிவாளர் அளித்த புகாரில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான மணல்மேடு தாளப்பட்டியில் உள்ள யுவராஜ், தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ், கவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் கடந்த 5-ம் தேதி சோதனை நடத்தினர். இதன்தொடர்ச்சியாக, கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் ஆகியோர் சிபிசிஐடி மற்றும் வாங்கல் வழக்குகளில் தாக்கல் செய்திருந்த தலா இரு முன்ஜாமீன் மனுக்கள் கடந்த 6-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து கடந்த 7-ம் தேதி கரூர் ஆண்டாங்கோவில் என்.எஸ்.ஆர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அவருக்குச் சொந்தமான தறிக்கூடம், பெட்ரோல் பங்க், எம்ஆர்வி அறக்கட்டளை, அவரது ஆதரவாளரும், உறவினருமான ராஜேந்திரன் வீடு என 5 இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை நடத்தினர். சோதனையின் போது ஆவணங்கள், பென்டிரைவ் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த ஒரு மாத காலமாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளரும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகியான கவினும் தலைமறைவாக இருக்கிறார். இந்த நிலையில் கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு பகுதி அம்மன் நகரில் உள்ள கவினின் வீட்டிற்கு இன்று காலை 7 மணிக்கு திருச்சியைச் சேர்ந்த சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தச் சென்றனர். அப்போது வீட்டிலிருந்த அவரது தந்தையிடம் போலீஸார் கவின் எங்கே இருக்கிறார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். காலை 8.30 மணிக்கு சோதனையை முடித்துக் கொண்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.