கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் உலக மக்கள் தொகை நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் அ.கிருஷண்மூர்த்தி, இயக்குநர் முனைவர் மா.குமுதா, முதல்வர் முனைவர் செ.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கவிஞர். பட்டிமன்ற பேச்சாளர் ரமா ராமநாதன் கலந்து கொண்டு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியது-
ஒரு காலத்தில் பெண் கல்வி என்பது மறுக்கப்பட்டு வந்த நிலையிலும் கூட, நம் மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு கிடைத்த வாய்ப்பு என்பது பெண் குலத்திற்கு கிடைத்த பெருமை என்று கூட சொல்லலாம். ஆனாலும், நம்நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50சதவீதமாக உள்ள பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் இன்னும் கூடுதலான வாய்ப்பகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ஒரு புள்ளி விவரப்படி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் விஷயத்தில் நாள்தோறும் சுமாராக 800பெண்கள் இறக்க நேரிடுகிறது. அதே போல் பெண் சிசுக் கொலை சில இடங்களில் நடைபெறுவதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் உரிமை சமூகத்தின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவுகிறது.
ஆண்கள் பிறந்தால் இனிப்பையும், பெண்கள் பிறந்தால் சலிப்பையும் பரிமாறிக் கொள்ளும் தேசமாக இருக்கும் நிலைமை மாற வேண்டும். இந்த ஆண்டிற்கான உலக மக்கள் தொகை நாளின் கருப்பொருளானது. ’யாரையும் விட்டுவிடாதீர்கள் எல்லோரையும் எண்ணி விடுங்கள்’ என்பதாகும். அதன் கூற்றுப்படி நாம் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்தால் பெரிய அளவில் உலகத்தை பாதிக்கிற விஷயம் என்னவென்றால், அது தண்ணீர் பற்றாக்குறைதான். உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 400கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக கணிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 2025-ஆம் ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் உலகம் முழுவதும் 180-கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டிருக்கிறது. இதனால் மக்களின் சுகாதாரத்தில் குறிப்பாக கிராமப்புற மக்களின் சுகாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். இதனை எதிர்கொள்ள மனித சமூகம் தயாராக வேண்டும் என்றார். முன்னதாக நடைபெற்ற பேச்சுப்போட்டியில் ஸ்ரீலெட்சுமி, வி.காயத்ரி, எம்.அனிஸ் பாத்தியா ஆகியோர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். நா.பூர்ணிமா வரவேற்றார் முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.நித்யபூரணி நன்றி கூறினார்.