விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு : இயந்திர கோளாறால் சில இடங்களில் இடையூறு

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

அதிமுக போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்

இத்தேர்தலில் 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 42 மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 13ஆம் தேதி நடக்கிறது.

காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அன்னியூர் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். இதேபோல், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி வாக்களித்தார்.

வாக்கு செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த வேட்பாளர் சி.அன்புமணி, “காலையில் இருந்து 20 பூத்களுக்கு சென்றுவந்துள்ளேன். அந்த 20 பூத்தும் எனக்கு மிகவும் சாதமாக உள்ளது. சின்ன குறையோ, எந்த பிரச்சினையோ இல்லை. எங்களின் வெற்றி உறுதி. மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. வெளியூரை சேர்ந்த திமுக நிர்வாகிகள் இங்கு உள்ளனர். அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க தவறினால் தங்களின் உரிமையை இழப்பதற்கு சமம். எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறுவது தவறு. ஆரோக்கியமாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் ஒட்டன்காடுவெட்டி, மாம்பழப்பட்டு, கானை உள்ளிட்ட மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் நிலவியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள வயர் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் நிலவியது. சிறிது நேர தாமதத்துக்கு பின் பழுதுகள் சரிசெய்யப்பட்டு மாம்பழப்பட்டு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியது.

விக்கிரவாண்டி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் குளவிக்கூட்டால் வாக்குபதிவின் போது இடையூறு ஏற்பட்டது. எனினும், பல இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. வயது முதிர்ந்தோர் சக்கர நாற்காலிகளில் வந்து தங்கள் வாக்கினை ஆர்வமுடன் செலுத்தினர்.