கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற மனைவி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்தபோது கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி தெகுதிக்குட்பட்ட அடங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (55). கூலித் தொழிலாளியான இவரது மனைவி கனிமொழி (49). இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது கனிமொழி திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் தனது வாக்கை செலுத்த அடங்குணத்துக்கு வந்துள்ளார் கனிமொழி.
காலை 11 மணியளவில் தி.கொசப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஏழுமலை கனிமொழியைப் பார்த்தவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் திடீரென கனிமொழியின் கழுத்தில் கத்தியால் குத்த முயறித்தபோது அவர் சற்று விலகவே லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஏழுமலையை பிடித்து கஞ்சனுார் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். கத்திக் காயத்துக்கு முதலுதவி சிகிச்சை செய்துகொண்ட கனிமொழி சிறிது நேரம் கழித்து வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.